பெண்ணுரிமையும்! இன்றைய பெண்களும்!!
July 10,2010
பெண்ணுரிமையும்! இன்றைய பெண்களும்!!
தூணில்லா வானம் அமைத்து துயர் துடைக்க வழியும் அமைத்த வல்ல நாயனான அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்..
பாதுகாப்பு பெட்டகமாக விளங்கும் இந்த உன்னதமான இஸ்லாமிய மார்க்கத்தில் இறை அடிமையாக விளங்கும் எனக்கு இறைவன் கட்டளையிட்டுள்ள கடமைகளை போல் யாருமே அளிக்காத உரிமைகளையும் வழங்கியுள்ளான். இன்றைய பெண்ணான நான் அதை இன்பமாக அனுபவித்து ஈருலக நன்மை பெற காத்திருக்கிறேன் என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
பிறப்புரிமை: பெண்கள் பிறப்பதை கேவலமாக கருதிய அறியாமை காலத்தில் வெறும் போக பொருளாக பயன்படுத்தபட்ட மடமை காலத்தில் அவளும் இறைவனின் பிரஜை என்றும், அவளும் இப்பூமியில் வாழ தகுதியுடைய ஆத்மா என்றும் கூறி அவள் பிறக்கும் உரிமையை பெற்று தந்த உன்னதமான மார்க்கம் இஸ்லாம்.
‘நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள், அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழக்கை வசதிகளையும்) அளிக்கின்றோம். அவர்களை கொல்லுதல் நிச்சயமாக பெரும் பிழையாகும். திருக்குர்ஆன் 17: 31
விஞ்ஞானம் வளர்ந்த இவ்வுலகத்தில்;, கருக்கலைப்பு கொலை செய்யும் பல நவீன நங்கைகளுக்கு இதுவே தக்க பதிலடியாகும்.
கல்வியுரிமை: பெண் பிறப்பதே கேவலமாக எண்ணிய காலத்தில் கல்வி கற்கும் உரிமை கேட்டால் கேள்விக்குறி மட்டுமே மிஞ்சும்.
‘அடும்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்று கூறிய மடயர்களை ஒழித்து சட்டங்கள் ஆழ்வதும் பட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று 20ம் நூற்றாண்டு கவிஞன் பாரதி கனவாய் சொல்லிவிட்டு போனான். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே, கல்வியை கற்பது ஆண் பெண் இருபாலர் மீதும் கட்டாய கடமை என்று உரிமையையும் கடமையாக வலியுறுத்திய செம்மல் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்கள், அந்த அறியாமை காலத்திலேயே சட்ட வல்லுனராக, மார்க்கம் கூறும் மேதையாக விளங்கிய பெண்மணி தான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள். எந்த அளவிற்கு என்றால் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் தெரியவில்லை என்ற பதிலை நான் கண்டதில்லை என்று அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அன்றைய காலத்தில் வழங்கப்பட்ட உரிமையை இன்று நாம் இமயம் தொடவும் பயன் படுத்தலாம், ஆகாயத்தை ஆராய்ந்து பார்க்கவும் பயன் படுத்தலாம். ஆனால் அனைத்தும் மார்க்கத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஆம்.. நம்முடைய நடத்தை, பேச்சு, ஆடை அலங்காரம், உணவு என்று அடிக்கிக்கொண்டே போகலாம்.
திருமண உரிமை: இருமனம் இணையும் திருமணம் உறவில் தன்னை மணக்கும் மணவாளனை தேர்வு செய்யும் உரிமையையும், மஹர் என்னும் மணக்கொடையை கேட்கும் உரிமையையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது.
‘…அவர்களை திருமணம் விஷயத்தில் நிர்பந்திக்கூடாது..’ திருக்குர்ஆன் 17: 31
‘நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடையை) மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்.’ திருக்குர்ஆன் 17: 31
மகன் கற்ற கல்விக்கும், கட்டுடலுக்கும் வட்டியுடன் கணக்கு போட்டு பைசா விடாது வாங்கும் (தட்சணை கைக்கூலி) வர்க்கத்தை திருத்தவும், பெண் குலத்தின் உரிமையை நிலை நாட்டவுமே இறைவன் இவ்வசனத்தை இறக்கியுள்ளான்.
விவாகரத்து உரிமை: திருமண உறவில் பிணக்கு ஏற்பட்டு பிளவு ஏற்படும் நிலை வந்தால் அவனை வட்டு விலகவும் இஸ்லாம் உரிமையினை அளித்துள்ளது. ஒவ்வாத கணவனோடு ஒட்டி தான் வாழ வேண்டும் என்றோ, அவனது அடிக்கும் குத்துக்கும் அடங்கி தான் போக வேண்டும் என்றோ கூறவில்லை. மாறாக விருப்பம் இல்லையா விலகி விடு என்று கூறி ‘ஹீலவள்’ என்ற உரிமையை வழங்கியுள்ளது மார்க்கம்.
சொத்துரிமை: திருமணம் முடித்து கொடுத்த பின் பெண்ணை கைக்கழுவி விடும் சமுதாயத்தில் பெற்றோரின் சொத்தில் பங்கும் கேட்டும் உரிமையையும் அல்லாஹ் கொடுத்துள்ளான்.
‘பெற்றோரோ நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்தில்) பெண்களுக்கும் பாகமுண்டு, அது குறைவாக இருந்தாலும் சரி அதிகமாக இருந்தாலும் சரியே’. திருக்குர்ஆன் 4: 7
சம்பாதிக்கும் உரிமை: பெண் அவளுக்கு பாதுகாவலர் இல்லாத சமயத்தில் தன் தேவைகளை பூர்த்தி செய்ய அவள் சம்பாதித்துக் கொள்ளலாம். அவளுக்கு பொறுப்பாளர் இருக்கும் போது அவரின் அனுமதியுடன் சம்பாதிக்க செல்லலாம் என்ற சுதந்திர உரிமையை இஸ்லாம் கொடுத்து உள்ளது.
சாட்சியம் அளிக்கும் உரிமை: பெண் பெண்ணாக மதிக்கப்படாத காலத்திலேயே அவள் சாட்சியம் சொல்லக்கூடிய அவளவிற்கு உயாந்நதவர்கள் என்று அவளை உயர்த்தி அந்த உரிமையையும் இறைவன் வழங்கியுள்ளான்.
‘… (கடனுக்கு பெண்கள் இருவரை சாட்சியாளர்களாக எடுத்துக் கொள்ளுங்கள்..” திருக்குர்ஆன் 2: 282
பர்தா : இறைவன் வழங்கியுள்ள இந்த உன்னதமான உரிமைகளை எல்லாம் அறியாத மூடர்கள் பர்தாவை கண்டதும் இஸலாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று கூப்பாடு போடுகிறார்கள். காம வெறியர்களின் பார்வையிலிருந்து பாதுகாக்கும் இந்த பெட்டகம், உடலுக்கு ம்டும் போடவில்லை. பார்வைக்கு நடைக்கு மற்றும் உள்ள அனைத்திற்கும் தான். ஏனென்றால் பெண்மை என்ற மென்மை பாதுகாக்கப்பட வேண்டிய கொக்கிஷம். சந்தை மாடுகளை போல் அவிழ்த்து, காண்பவர் கண்களுக்கு விருந்து படைக்க அது ஒன்றும் கடையில் விற்கப்படும் காலனா பொருள் அல்ல. கற்பை பாதுகாப்பது அடிமை தனமா? மேலே கூறிய எந்த உரிமையையும் பெண்களுக்கு கொடுக்காமல் பர்தாவை மட்டும் கொடுத்து மூலையில் முடக்கி உட்கார சொன்னால் தான் அடிமை தனம் எனலாம்.
‘… நபியே..நீர் கூறுவீராக! மூஃமினான பெண்கள், தங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ளட்டும். தாங்கள் மறைத்து வைக்கும் அலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்’. திருக்குர்ஆன் 24: 31
இப்படி பாதுகாப்புடன் அவள் ஆசிரியை பணி மட்டுமல்ல ஆகாயத்தை எட்டி பிடிக்கும் பணியையும் செய்யலாம்ஃ இதை விடுத்து அரை குறை ஆடையுடன் அரை கால் டவுசரும் போடும் உரிமையும் ஆ;ணகளை பொல் வெளியில் சுற்றி திரியும் உரிமையும் வேண்டும் என்பவர்களுக்கு பர்தா மட்டும் அல்ல, சொல்லப்படும் அனைத்து ஒழுக்க மாண்புகளும் உரிமை பறிப்பாக தான் இருக்க தெரியும். விழா கோலம் பூண்டு உலா வரவும் உல்லாச பறவை போல் பறந்து காணும் கண்களுக்கெல்லாம் குளிர்ச்சி ஊட்டும் காட்சி பொருளாக இருக்க வேண்டும் என்ற உரிமை வேண்டும் என்று நினைக்கும் ஒரு சிலருக்கு இஸ்லாத்தில் மட்டும் அல்ல கலாச்சாரம் மிக்க எந்த நாட்டிலும் எந்தவொரு வீட்டிலும் இடமிருக்காது.
‘முதியோர் சொல்லும், முழு நெல்லிக்கனியும் முன்னால் கசக்கும் பின்னால் தான் இனிக்கும்’; இது போல் தூரத்திலிருந்து பார்க்கும் போது அடிமையாக வாழ்பவர்கள் போல தெரியும் இஸ்லாமிய பெண்களை நெருங்கி பார்த்தால் அல்லாஹ்வின் அருளில் அவள் தனக்கு கொடுக்கப்பட்ட கடமைகள் அனைத்தையும் ஒழுக்கத்துடன் நிறைவேற்றி உண்மையான உரிமையுடன் உல்லாசமாக ஆனந்தமாக வாழ்கிறார்கள். நானும் அவ்வாறே வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.. என்று கூறி எனது கட்டுரையினை முடிக்கிறேன்..
வல்ல நாயன் நம் அனைவர் மீதும் நல்லருள் புரிவானாக..!
Thanks: Sis Farida Fujaira, Emirates.