Kuala Lumpur, Malaysia

வரதட்சணை : பூனைக்கு மணி கட்டுவது யார்?

வரதட்சணை : பூனைக்கு மணி கட்டுவது யார்?


  August 23,2010 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
வரதட்சணை பற்றி ஜமாஅத் தலைவர் அவர்கள் கருத்து தெரிவித்து இருந்தார்கள். நம் ஊர் ஜமாத்தில் ஏற்கனவே, வரதட்சணை வாங்க கூடாது என்று சட்டம் இருந்தது என்றும் பிறகு அது நீக்கம் செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள்.அந்த சமயத்தில்  இதை நீக்கம் செய்ய ஏன்  அனுமதித்தார்கள்?

கடல் கடந்து பிழைப்புக்காக மலாயா வந்தோம். ஏன் இந்த கைக்கூலி சமாசாரத்தையும் உடன் கொண்டு வந்தோம்?
———————————————————————————————————

இஸ்லாம் மேன்மையாக மதிக்கும் திருமண நிகழ்வின் ஆரம்பத்திலேயே இஸ்லாமிய வழிகாட்டுதல்களைக் கைவிட்டு, பிற மதக் கலாச்சாரத்திலிருந்து கடன் வாங்கிய பழக்க வழக்கங்களை நுழைத்து, நபி(ஸல்) அவர்களின் சுன்னாவின்படி அமைய வேண்டிய தங்களின் திருமண வாழ்வின் துவக்கத்தைப் பெரும்பாலான முஸ்லிம்கள் கண்ணை மூடிக் கொண்டு ஜாஹிலிய்யத்திற்குத் தாரை வார்த்து விட்டு ஆரம்பிக்கின்றனர். அவ்வாறெனில் அவர்களின் திருமணத்திற்குப் பிந்தைய வாழ்வு எவ்வகையில் இறைவனுக்கு உவப்பான, மறுமை வெற்றிக்கான வழியில் அமையும்? எனச் சிந்திக்க வேண்டியது இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டிய முஸ்லிம்களுக்குக் கடமையாகும்.

நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அறியாமைக்கால அரேபியர்களிடம் நிலவிய சில நடைமுறை பழக்க வழக்கங்களை இஸ்லாமிய நெறிமுறைகளாக அங்கீகரித்தார்கள். உதாரணத்திற்கு மிஸ்வாக் செய்தல், கத்னா செய்தல் போன்றவற்றை கூறலாம். அவை மனிதனுக்கு நன்மை பயக்கும் நற்பழக்கங்கள் என்பதால் அவற்றை இஸ்லாத்தில் சுவீகரித்துக் கொண்டார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டல்லவா? அந்த அடிப்படையில், அப்படிப்பட்ட நற்செயலில் ஒன்றானதா இந்த வரதட்சனை? இல்லையே! பின் எப்படி இந்த இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணையை வரவேற்று ஏற்றுக்கொண்டது? அதுவும் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த அன்னிய மதத்தவரின் கலாச்சாரமான இவ்வரதட்சணை எப்படி நுழைந்தது?

ஒரு பெண்ணை மண மேடையில் அமர்த்துவதற்காக வரதட்சணை என்னும் மரணப் படுகுழியில் விழும் பெற்றோர்கள் எத்தனை பேர்? குமர் காரியம் என்று பிச்சைக்காரர்களாக கையேந்தி வரும் முஸ்லிம்கள் எத்தனை பேர்? உடன் பிறந்த சகோதரிகளை ‘கரை’ ஏற்றுவதற்கு கடல் கடந்து சென்று உழைத்து உருக்குலைந்து வெளி  நாடுகளில் வாலிபத்தை தொலைத்து நிற்கும் சகோதரர்கள் எத்தனை பேர்? கல்யாணம் என்பதே கானல் நீராகி கண்ணீர் சிந்தி நிற்கும் கன்னியர் எத்தனை பேர்? வாழ்க்கையில் விரக்தியுற்று வேலி தாண்டி ஓடிய வெள்ளாடுகள் எத்தனை, எத்தனை? என்றேனும் இந்த சமுதாயம் இதனை எண்ணிப் பார்த்து இருக்குமா?

இல்லற  வாழ்கையில்  இருவரும்  மகிழ்சி  அடையும்  போது  இருவருக்கும்  சமமான  பங்கு இருக்கும் போது யாரும் யாருக்கும் வரதட்சனை கொடுக்கத் தேவையில்லை என்று பெண்கள் இயக்கங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் திருமறைக் குர்ஆனோ வரதட்சனையைக் ஒழித்துக் கட்டுவதில் உலகத்துகே முன்னணியில் நிற்கிறது.

ஆணும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டாம்! பெண்ணும் ஆணுக்குக் கொடுக்க வேண்டாம் என்று கூறாமல் ஆண்கள் பெண்களுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. உலகில் எந்த மார்க்கமும் – இயக்கமும் கூறாத வித்தியாசமான கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது.

இந்த வரதட்சனை கொடுமையை வளர விட்டது யார்? ஆண் வீட்டாரா அல்லது பெண் வீட்டாரா?
குனிவதற்கு ஆள் இருந்தால் கொட்டுவதற்கும் ஆள் இருக்கும்! கொட்டுவதற்கு ஆள் இருந்தால் குனிவதற்கும் ஆள் இருக்கனுமா?
கேட்பதற்கு ஆள் இருந்தால் கொடுப்பதற்கும் ஆள் இருக்கனுமா?

கல்யாண சேலை வாங்க சென்னை போனோம், அதற்கேற்ற பலவ்சு வாங்க பெங்களூர் போனோம், அதை தைக்க பாம்பே போனோம் என்று பெருமை பேசும் பெண் வீட்டாரும் இருக்கிறார்களே?
மாலைகளையும் பூச்செண்டுகளையும் பூக்களையும்  ஊரிலிருந்து கொண்டு வர தனி ஏற்பாடு செய்து இருக்கிறோம் என்று அங்கலாய்க்கும் பெண் வீட்டார் இல்லையா?
ஏற்கனவே பெண் பேசப்பட்டுவிட்ட நிலையிலும் தங்களின் பண ‘பவரை’ வைத்து ரேட்டை ஏற்றி தங்களின் மகளை கரை சேர்க்க நினைக்கும் நபர்களை என்ன சொல்வது? ஆண்டவன் தன ‘பவரை’ காட்டினால், தன அஸ்திவாரம் ஆடிப் போய்விடும் என்பதை மறந்தது ஏனோ?
உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு, பிறகு பல கண்டிஷன் போடும் ஆண் வீட்டாரை எந்த வகையில் சேர்ப்பது?
‘கைக்கூலி’ வாங்காவிட்டாலும் தேவை இல்லாத பல செலவுகளையும் பெண் வீட்டார் தலையில் சுமை ஏற்றுவது ஏன்?

வசதிப்படைத்த பெண்ணின் பெற்றோர் சிலர் தங்களின் மகளுக்கு மனமுவந்து அன்பளிப்பாக வழங்குவதை நாம் குறைகூற இயலாது. அதை திருமணத்தன்று செய்யாமல் பிரிதொரு சமயத்தில் மணமக்களுக்கு செய்யலாமே! திருமணத்தன்று பலர் முன்னிலையில் இப்படி செய்வது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அல்லவா அமைந்து விடுகிறது. இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்? எனவே எக்கோணத்திலிருந்து பார்த்தாலும் இவ்வரதட்சணை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு கொடிய தீமையே என்பது மறுக்க முடியாத உண்மை.

இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு படைத்தவனுக்கு மட்டுமே அஞ்சி வாழும் ஒரு முஸ்லிம், தன்னுடையத் திருமண வேளையில் மட்டும் படைத்தவனை மறந்து, தான் மணம் புரியப்போகும் பெண்ணிடம் அதற்காகக் கைக்கூலியை கௌரவப் பிச்சையாகப் பெறுவது அவமானமானது மட்டுமல்ல, படைத்தவனின் சட்டத்திற்கு எதிராக அவனுக்கே சவால் விடுவதற்கு ஒப்பானதாகும் என்பதை அத்தகைய கைக்கூலி மாப்பிள்ளைகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வரதட்சனை வாங்கும் திருமணங்களை ஜமாஅத்துக்கள் அடியோடு புறக்கணிக்கும் நிலையை உருவாக்கி அல்லாஹ்வின் கட்டளைக்கு உயிரூட்ட வேண்டும். இளைய சமுதாயம் வரதட்சணையினால் ஏற்படும் அவலங்களை உணர்ந்து அந்த  மூடப் பழக்கத்தை உடைத்து எறிந்திட முன்வர வேண்டும்!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூற வேண்டாம். மாறாக, அது இறைவனின் இறை அச்சத்தால் நிச்சயிக்கப்படுகிறது  என்று மார்தட்டி சொல்வோம்.

இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பது கஷ்டம்தான். எல்லா தரப்பினரும் இறை அச்சம் கொண்டவர்களாக, அருள்மறை வழி  நடந்தால்தான் ஒரு நல்ல முடிவு கிடைக்கும், இன்ஷாஅல்லாஹ்.

இந்த வேளையில், நாம் நம் சமுதாயத்தை சீர் திருத்தனும்  என்று ஆராய்வதைவிட , முதலில் நம் ஜமாஅத் இதற்கு சரியான வழிமுறைகளை ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்கணும். ஊர் வாயை மூட நினைப்பது ‘ பான்யாக் சூசாலா ‘. ஆனால் உலை வாயை மூடுவது ‘ செனாங்  சஹாஜலா ‘. மற்றவர்களுக்கு நாம் முன்னுதாரணமாக  இருப்போம்.

“தங்களைத் தாங்களே திருத்திக்கொள்ள முன்வராத எந்தச் சமுதாயத்தையும் அல்லாஹ் திருத்தி அமைப்பதில்லை” (அல்குர்ஆன் 013:011).

“மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்களே அன்றி, மனிதர்களுக்கு ஒருபோதும் அல்லாஹ் அநீதி இழைப்பதில்லை”
 – (அல்குர்ஆன் 010:044).

பன்றி இறைச்சி உண்பது தீய, பாவச் செயல்” என்ற உணர்வு சமூகத்தில் ஊறிப் போயுள்ள அளவிற்கு, வரதட்சணை வாங்குதலும் பாவச் செயல்” என்ற எண்ணம் உள்ளத்தில் ஊன்றப் படும் வகையில் ஒவ்வொருவரும் செயல்பட ஆரம்பித்தால் இச்சமுதாயம் இறை உவப்புக்குரிய உன்னத சமுதாயமாக நிலைபெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இந்த வரதட்சணை கொடுமையை ஒழிப்பதற்கு சில ஆலோசனைகள்:

1. வரதட்சணை கொடுத்து என் பெண்ணை கட்டிக் கொடுக்க மாட்டேன் என்று பெண் வீட்டாரும், வரதட்சணை வாங்கி  என் மகனுக்கு திருமணம் செய்யமாட்டேன் என்று ஆண் வீட்டாரும் இறை அச்சத்துடன் ஒரே உறுதியாய் இருக்கணும்,

2. வரதட்சணை வாங்கினால் நான் கல்யாணம் செய்யமாட்டேன் என்று ஓர் ஆணும், வரதட்சணை கொடுத்தால் நான் கல்யாணம் செய்யமாட்டேன் என்று ஓர் பெண்ணும் உறுதியாய் இருக்கணும்,

3. வரதட்சணை வாங்கப்பட்ட கல்யாணத்தை, அனைவரும் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க வேண்டும்!

அதெல்லாம் சரிதான்! முதலில் பூனைக்கு மணி கட்டுவது யார்ர்ர்ர்ர்ர்???????????

( மனதிற்கு தோன்றிய கருத்துக்கள் இவை. யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை. ஏதும் குற்றங் குறைகள் இருந்தால் மன்னிப்பீர்களாக! )


 

Newsletter Sign Up

For Latest Updates