Kuala Lumpur, Malaysia

திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனில் வாழ்விலும் ஒரு முக்கியமான அம்சம்.

திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனில் வாழ்விலும் ஒரு முக்கியமான அம்சம்.


  August 06,2010 

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).

புகழனைத்தும் விண்ணையும் மண்ணையும் அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் நம்மையும் படைத்த தூயோனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே!

திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனில் வாழ்விலும் ஒரு முக்கியமான அம்சம் என்பது பொது விதி. ஆனால் இஸ்லாம் ஒருபடி மேலே போய் ‘ஒருவன் திருமணம் புரிந்தால் அவன் இறைமார்க்கத்தில் ஒரு பகுதியை நிறைவேற்றி விட்டான். எஞ்சியவற்றில் அவன் இறைவனை அஞ்சி நடந்து கொள்ளட்டும்.’  என்று கூறுகிறது. இன்னும் ஒரு நபிமொழி இக்கருத்தை வலியுறுத்துகிறது. ‘திருமணம் என் வழிமுறை (சுன்னத்). என் வழிமுறையைப் புறக்கணித்தவர் எம்மைச் சார்ந்தவர் அல்லர்.’

குழந்தைகள் தான் திருமண வாழ்வின் பரிசு. அவர்கள் பெற்றோர்களுக்குக் கண்குளிர்ச்சியாகவும், பரபரப்பான வாழ்வில் அமைதி கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இறைவன் அனுமதித்த முறையில் இனவிருத்திக்கும் திருமணமே சிறந்தது.

நம்பிக்கையாளர்களுக்கு வெளிச்சம் தரக்கூடிய இரு ஒளிகளாகிய குர்ஆன், ஹதீஸ் இவற்றில் ‘கொடுப்பது’ பற்றி உள்ள செய்திகள், கட்டளைகள் :

‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4)

‘நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரை…நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்..’ (அல்குர்ஆன் 33:50)

‘..அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள்…’ (அல்குர்ஆன் 4:24)

திருமணம் செய்யப் போகும் பெண்ணிடமிருந்தோ அவளுடைய பெற்றோரிடமிருந்தோ ‘எடுப்பது’ பற்றி ஏதாவது இருக்கிறதா என்று குர்ஆனின் 114 அத்தியாயத்திலும் தேடினாலும் ஒரு வசனம் கூட கிடைக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது, தோட்டம், திர்ஹம், தங்கம் இவை மட்டுமல்லாமல் இரும்பு மோதிரம், கேடயம் ஏன் மனப்பாடம் செய்த சூராவைக் கூட மஹராக ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பவங்களைப் பார்க்கிறோம். ஆனால் பெண் இத்தனை பவுன் நகை, சீர் வரிசை, பலகாரங்கள், இத்தியாதிகள் இவற்றுடன் கணவன் வீட்டுக்குச் சென்றாள் என்று எந்தக் குறிப்பும் இல்லை.

பெண் வீட்டாரிடமிருந்து வாங்குவது என்பது மற்ற சமுதாயத்தினரின் செயல். பெண் என்றால் சீதனத்துடன் தான் கணவன் வீட்டிற்குச் செல்ல வேண்டும், மாப்பிள்ளைக்கு வரதட்சணை தர வேண்டும் என்பதெல்லாம் ‘அவர்கள்’ சம்பிரதாயங்கள். இறைவேதத்தையும், நபிவழியையும் முதுகுக்குப் பின்னால் தூக்கிப் போட்டு விட்டு ‘அவர்களை’ப் பின்பற்ற ஆரம்பித்து விட்டோம் நாம்.

இப்போது நடக்கும் திருமணங்கள் வியாபாரம் போல் ஆகிவிட்டது என்று  சொல்வதும் தப்புதான்.வியாபாரம் என்றால் பணத்தைக் கொடுத்து ஒரு பொருளை வாங்குவது அல்லது பொருளை விற்று பணத்தைப் பெறுவது. சரி, நம் கையை விட்டுப் பணம் போகும் போது பொருள் நம் கைக்கு வர வேண்டும் – அது தான் வியாபாரம். ஆனால், திருமணத்தில் பணம் நம் கையை விட்டுப் போகிறது, பெண்ணும் போகிறாள், ஆனால், நம் கைக்கு எதுவும் வருவதில்லை. இது எந்த வியாபார விதிக்கும் உட்பட்டதாக இல்லையே.. மோசடி வியாபாரமாக அல்லவா இருக்கிறது!சந்தையில் மாடு விற்பவன் கூட மாட்டைக் கொடுத்து விட்டுப் பணத்தை எண்ணி வாங்கிக் கொள்கிறான். ஆனால் பெண்ணைப் பெற்றவனோ, பெண்ணையும் கொடுத்து, பொன்னையும் கொடுத்து, சீர் என்ற பெயரில் புழங்குவதற்கு சாமான்களையும் கொடுத்து, பிறகு பணத்தையும் கொடுக்கிறான்.. நம் பெண்கள் மாட்டைவிடவா கேவலமாகி விட்டார்கள்?

இதை பெண்களும் யோசிக்க வேண்டிய விஷயம்.. பொன்னோடும், பொருளோடும் மாமியார் வீட்டுக்குப் போவது தான் பெருமை என்ற எண்ணத்தை பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஹஜ் செய்வது இஸ்லாத்தில் கட்டாயக்கடமை. அதாவது பொருள் வசதியும், உடல்வலிமையும் உள்ளவர்கள் செய்ய வேண்டிய கடமை. ஆனால், உடலில் வலு இருந்தும்;, கையில் வழிச்செலவுக்குப் போதுமான பணம் இருந்தும் புனித பயணத்தைத் தள்ளிப் போட அவர்கள் காரணம் காட்டுவது திருமணத்திற்குப் பெண் இருக்கிறாள். அவளுடைய திருமணக் கடமையை முடித்த பின்பே ஹஜ் செய்ய வேண்டும் என்பதை மார்க்கச் சட்டமாக ஆக்கி விட்டார்கள். மரணம் முந்திக் கொண்டால் ஹஜ் செய்ய முடியாமலே ஆகிவிடும். இதற்கு யார் காரணம் என்பதை சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.

அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமான இஸ்லாத்தில் பிறந்துள்ள நாம், எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்! ஆனால், துரதிரூஷ்டவசமாக நாம் அனாச்சாரங்களால் அதை எவ்வளவு தூரம் கறைபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கறைபடுத்திக் கொண்டிருக்கிறோமே இது நியாயமா? அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தந்துள்ள இஸ்லாமியத் திருமணம் வீண் சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாத எளிய, அழகிய வாழ்க்கை ஒப்பந்தம். பிறப்பிலிருந்து இறப்பு வரை குர்ஆனும், நபிவழியும் சொல்கிறபடி வாழக் கடமைப்பட்டவர்கள் நாம். மாற்றுமதத்தினரின் வீண் சம்பிரதாயங்களை பின்பற்ற ஆரம்பித்ததனால் நம் சமுதாயத்தில் எத்தனைக் குழப்பங்கள்!

இஸ்லாம் காட்டும் வழிபடி, மஹர் கொடுத்து மணம் முடித்து, நம்மால் இயன்ற அளவு வலிமா விருந்து கொடுத்து உயர்ந்து காட்டுவோம். நம் இல்லத்திற்குத் தேவையானதை நம்முடைய  உழைப்பில் வாங்குவது தான் பெருமை.

இன்று எந்த லாபமும் கருதாமல் ஒரு பெண்ணை மணந்தால், அடுத்த தலைமுறையும் திருந்தும். இந்தப் ஈனப் பழக்கம் வேரோடு அழிந்து விடும். நம் உடலை விட்டு உயிர் பிரிந்த வினாடியே நாம் சொந்தம் என்று சொல்லிக் கொள்ளும் எதுவும் நமக்கு சொந்தம் இல்லாமல் போய்விடும். கபன் துணியைத் தவிர நம்முடைய எந்தப் பொருளும் நம்முடன் வரப்போவதில்லை என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ‘எடுப்பது’ என்பது மாற்றார் வழி.. ‘கொடுப்பது’ மட்டுமே நம் வழி!

இறைவன் நம் அனைவர் மீதும் அருள் புரிவானாக ! ஆமீன் !

 

Newsletter Sign Up

For Latest Updates