தாம்பத்திய உறவு
July 22,2010
‘உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்களாவர். எனவே உங்கள் விளை நிலத்தில் விரும்பியவாறு செல்லுங்கள்!’ (அல்குர்ஆன் 2:223)
திருமணத்தின் மூலம் ஆணும் பெண்ணும் இரண்டறக் கலக்கும் தாம்பத்திய உறவு குறித்து எழும் எல்லா ஐயங்களையும் விளக்கும் அற்புதமான வசனம் இது.
ஆபாசமாகவும் இல்லாமல் அனைத்து ஐயங்களையும் அகற்றக் கூடிய வகையில் நாகரீகமாக விளக்க முடியாதா? முடியும்! மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனம் மிக அருமையாக இதை விளக்குகின்றது.
ஆண்களாயினும் பெண்களாயினும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை ஆதரிக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். ஆண்கள் ஆண்களுடன் சேர்வதும் பெண்கள் பெண்களுடன் சேர்வதும் கூடாது என்பதை எவ்வளவு அற்புதமாக இவ்வசனம் கூறிவிடுகிறது.
பெண்களை விளைநிலங்களாகவும் ஆண்களை அதில் பயிரிடுவோராகவும் நாகரீகமான உமமை கூறியதன் மூலம் கேடு கெட்ட அந்தக் கலாச்சாரத்தை எதிர்க்கிறது.
விளைநிலத்தில் தான் பயிரிட வேண்டும் என்ற கூற்று ஆண்கள் ஆண்களுடன் கூடுவதையும் மறுக்கிறது. மனைவியரின் மலப்பாதையில் கூடுவதையும் மறுக்கிறது. அவ்விடங்களில் கூடுவதால் எதையும் உற்பத்தி செய்ய முடியாது.
தாம்பத்திய வாழ்வில் எந்த முறையைக் கடைப்பிடிப்பது? எந்த முறையை வேண்டுமானாலும் கடைப்பிடியுங்கள்! இதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
‘உங்கள்விளைநிலங்களில் நீங்கள் விரும்பியவாறு செல்லலாம்’ என்ற சின்ன வாசகம் இதற்கு விடையளிக்கிறது.
இவ்விரண்டைத் தவிர வேறு எதற்கும் தாம்பத்திய வாழ்வில் தடை இல்லை. எதைப் பற்றி மனிதர்கள் விலாவாரியாகக் கேள்வி எழுப்ப கூசுவார்களோ, அல்லது காதால் கேட்கக் கூச்சப்படுவார்களோ அந்த விஷயத்தை விலாவாரியாகச் சொல்லாமல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்கிறது குர்ஆன். அது கூடாது இது கூடாது என்று தடை விதிக்கப்பட்டால் அந்தத் தடைகளைக் கவனத்தில் கொள்ள முடியாத நேரம் அது. எந்தத் தடையும் கட்டுப்பாடும் அர்த்தமற்றதாகத் தான் அமையும். இதனால் பாவம் செய்து விட்டோமோ என்ற உறுத்தல் தான் மிஞ்சும்.
படைத்தவனுக்கு இதெல்லாம் தெரியும் என்பதால் தாம்பத்தியத்தில் அனைத்தையுமே – அனைத்தையும் தான் – அனுமதிக்கிறான்.
அதுமட்டுமின்றி இன்றைய நவீன உலகில் மனிதன் சந்திக்கிற பல்வேறு பிரச்சனைகளுக்கும் கூட இவ்வசனம் தக்க தீர்வைக் கூறுகிறது.
குழந்தையில்லாத பெண்கள் கணவன் அல்லாத மற்றவனின் உயிரணுவைக் கருவறையில் செலுத்தும் முறை பரவிவருகிறது. உங்கள் மனைவியர் உங்களது விளைநிலம் தான். நீங்கள் தான் பயிரிட வேண்டும். வேறு எவரும் அதில் பயிரிட முடியாது என்று தெளிவாகவே குர்ஆன் கூறிவிடுகிறது.
விபச்சாரத்தில் ஈடுபட எண்ணுவோருக்கு இதில் எச்சரிக்கை உள்ளது. உங்கள் விளைநிலங்களில் – அதாவது மனைவியரிடத்தில் – மட்டும் தான் பயிரிடலாமே தவிர மாற்றாரின் விளைநிலத்திலோ அல்லது உங்களுக்கு உரிமையில்லாத நிலத்திலோ பயிரிட முடியாது என்பதும் இதனுள் அடங்கிக் கிடக்கிறது.
திருமண வாழ்வில் அடியெடுத்து வைப்பவர்கள் இவ்வசனத்தை சிந்தித்தார்களானால் தாம்பத்திய வாழ்வு குறித்து எவரிடமும் எந்த விளக்கமும் கேட்கத் தேவையில்லை. இவ்வசனங்கள் மட்டுமே எல்லா சந்தேகங்களையும் நீக்குவதை உணர்வார்கள்.