Kuala Lumpur, Malaysia

ஏன் இஸ்லாம் — ஆமினா அசில்மி

ஏன் இஸ்லாம் — ஆமினா அசில்மி


  August 03,2010 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஆமினா அசில்மி (Aminah Assilmi), மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞர். அமெரிக்காவைச் சார்ந்த  சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர் ( International Union of Muslim Women ).
ஆமினா அசில்மி, இந்த பெயரை கேட்டாலே இவரைப்பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு புது உற்சாகம் பிறக்கும். ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்ட பிறகு கடந்த 33 ஆண்டுகளாக இவர் செய்து வரும் இஸ்லாமிய சேவைகள் அளப்பறியது. சொல்லி மாளாதது. பல முஸ்லிம்களுக்கு இவருடைய வாழ்கை பயணம் ஒரு பாடம். அதைத்தான் இங்கு காண இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.


“நான் முஸ்லிம் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன். இஸ்லாம் என்னுடைய இதயத்துடிப்பு. இஸ்லாம் என்னுடைய பலம். இஸ்லாம் இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை. அல்லாஹ், அவனுடைய மகத்தான கிருபையை என்னிடம் காட்டாவிட்டால் என்னால் வாழ முடியாது” —– ஆமினா அசில்மி

ஆமினா அசில்மி அவர்கள் கிறிஸ்துவ பின்னணியில் (Southern Baptist) இருந்து வந்தவர், தன் கல்லூரி காலங்களில் ஒரு மிகச்சிறந்த மாணவியாக திகழ்ந்தவர், பல விருதுகளை பெற்றவர்.

ஒரு கணினி கோளாறு இவருடைய வாழ்க்கையை திருப்பி போட்டது.

அது 1975ஆம் ஆண்டு. முதன் முதலாக ஒரு வகுப்புக்கு முன்பதிவு செய்ய கணினி பயன்படுத்திய நேரம். ஆமினா அவர்கள் தான் சேர வேண்டிய வகுப்புக்கு தன் பெயரை முன் பதிவு செய்து விட்டு தன் தொழிலை கவனிப்பதற்காக ஒக்ளஹோமா (Oklahoma) சென்று விட்டார். திரும்பி வர தாமதமாக, வகுப்பு துவங்கி இரண்டு வாரம் சென்ற பிறகே வந்து சேர்ந்தார். விட்டு போன வகுப்புகளை வெகு சீக்கிரமே கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஏனென்றால், கணினி தவறுதலாக வேறொரு வகுப்பில் அவரை முன்பதிவு செய்திருந்தது. அந்த வகுப்பு தியேட்டர் (Theatre) வகுப்பு என்று அழைக்கபட்டது, அந்த வகுப்பில் அடிக்கடி அனைத்து மாணவர்கள் முன்பு பேச வேண்டிருந்தது. இயல்பாகவே ஆமினா அவர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டிருந்ததால் இந்த வகுப்பில் சேர மிகவும் அஞ்சினார்.

மிகவும் தாமதம் என்பதால் இந்த வகுப்பை புறக்கணிக்க முடியாத நிலை. மேலும் இந்த வகுப்பை அவர் புறக்கணித்தால் அவர் பெரும் ஸ்காலர்ஷிப்பை இழக்க வேண்டிய நிலை வரலாம். ஆகவே இந்த வகுப்பில் சேருவதென முடிவெடுத்தார்.

அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற அவருக்கு மாபெரும் அதிர்ச்சி. அந்த வகுப்பு முழுவதும் அரேபிய மாணவர்கள். அவ்வளவுதான். இனிமேல் வகுப்பிற்கு செல்ல கூடாதென முடிவெடுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்

“அந்த நாகரிகமற்ற அரேபியர்களுடன் படிக்க மாட்டேன்”

ஆமினா அவர்களின் கணவர் அவருக்கு ஆறுதல் கூறினார், இறைவன் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்குமென்று. அமீனா அவர்கள் இரண்டு நாட்கள் வீட்டின் அறையில் அடைந்து இருந்தார். அறையை விட்டு வெளியே வந்த அவர் சொல்லியது

“நான் அவர்களுடன் சேர்ந்து படிப்பேன். மேலும் அவர்களை கிறிஸ்துவராக்குவேன்”

இறைவன் இந்த அரேபியர்களை மதம் மாற்றுவதற்காகவே தன்னை அவர்களுடன் சேர வைத்ததாக நம்பினார். அரேபியர்களுடன் சேர்ந்து படிக்க தொடங்கினார். அவர்களுக்கு  கிருஸ்துவத்தை எடுத்துரைத்தார்.

” நான் அவர்களிடம் சொல்லுவேன், ஏசுவை மீட்பராக ஏற்காவிட்டால் எப்படி அவர்கள் நரகத்தில் வதைக்க படுவார்கள் என்று…நான் சொல்வதை அவர்கள் கவனமாக கேட்டுக்கொண்டார்கள். மிகுந்த கண்ணியம் காட்டினார்கள். ஆனால் மதம் மாறவில்லை. பிறகு நான் அவர்களிடம் ஏசு கிறிஸ்து எவ்வளவு ஆழமாக அவர்களை நேசிக்கிறார் என்று விளக்கினேன். அப்பொழுதும் அவர்கள் என் பேச்சை சட்டை செய்யவில்லை”

பிறகு ஆமினா அசில்மி அவர்கள் ஒரு முடிவெடுத்தார்கள்…

“நான் அவர்களுடைய புனித நூலை படிப்பதென முடிவெடுத்தேன், இஸ்லாம்  ஒரு பொய்யான மார்க்கம், முஹம்மது ஒரு பொய்யான தூதர் என்று நிரூபிப்பதர்க்காக”

ஆமினா அசில்மி அவர்களின் வேண்டுதலின் பேரில் ஒரு மாணவர் குரானையும் மற்றுமொரு இஸ்லாமிய புத்தகத்தையும் கொடுத்தார். இந்த இரண்டு புத்தகங்களையும் அடிப்படையாக வைத்து தன் ஆராய்ச்சியை தொடங்கினார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் முடிவில் மேலும் பதினைந்து இஸ்லாமிய புத்தகங்களை படித்து முடித்திருந்தார். அப்பொழுதெல்லாம் குரானில் தான் எது சர்ச்சைக்குரியதோ என்று நினைக்கிறாரோ அதையெல்லாம் குறிப்பெடுத்து கொள்வார், இஸ்லாம் பொய் என்று நிரூபிப்பதர்க்காக. ஆனால் குரானின் மூலம் தனக்குள் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.

” நான் மாறி கொண்டிருந்தேன், சிறிது சிறிதாக, என் கணவர் சந்தேகம் படுமளவிற்கு. நாங்கள் ஒவ்வொரு வெள்ளியும் சனியும் பார் (BAR) மற்றும் பார்ட்டிகளுக்கு சென்று கொண்டிருந்தோம். ஆனால் நான் இனிமேலும் அங்கு  செல்ல விரும்பவில்லை. அது போன்ற இடங்களில் இருந்து என்னை தனிமை படுத்தினேன்.”

பன்றி இறைச்சி மற்றும் குடியை நிறுத்தி விட்டார். இது அவருடைய கணவரை சந்தேகம் கொள்ள செய்தது. தன்னை விட்டு செல்லும்படி சொல்லிவிட்டார். ஆமினா அசில்மி அவர்கள் தனி வீட்டில் வசிக்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது மேலும் இஸ்லாத்தை பற்றி ஆராயச்  செய்தார்கள்.

அப்பொழுது அவர்களுக்கு அப்துல் அஜீஸ் அல் ஷேய்க் என்பவரது அறிமுகம் கிடைத்தது.

“அவரை என்னால் மறக்க முடியாது. நான் இஸ்லாத்தை பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மிக பொறுமையாக அறிவுப்பூர்வமாக பதிலளித்தார். அவர், என்னுடைய கேள்வி தவறானது என்றோ, முட்டாள்தனமானது என்றோ ஒரு பொழுதும் கூறியதில்லை. சிறிது சிறிதாக என்னுடைய சந்தேகங்கள் விலகின”

1977, மே 21இல், அப்துல் அஜீஸ் மற்றும் அவரது தோழர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை அமீனா அவர்கள் ஏற்றுக்கொண்டார்.

” இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது  தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்”

“நான் முதன்முதலாக இஸ்லாத்தை படிக்க தொடங்கியபோது, எனக்கு இஸ்லாத்தினால் தேவை என்று ஒன்று இருந்ததாக நினைவில்லை. இஸ்லாமும் என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் முன்பிருந்ததைவிட இப்பொழுதோ என் மனதில் சொல்லமுடியாத ஒரு வித அமைதி, மகிழ்ச்சி. இதற்க்கெல்லாம் காரணம் இஸ்லாம் தான்”

இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. ஆமினா அசில்மி அவர்களின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப்  பார்த்தார். அவரது தந்தையோ ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள்.
குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப் அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும் சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும் அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே.
இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே.
ஆமினா அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால் ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

விவாகரத்து தவிர்க்க முடியாமல் போனது. ஆமினா அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இஸ்லாம் அப்பொழுது அங்கு மிக சிறிதே அறியப்பட்ட நேரம். அந்த சிறிதும் கூட இஸ்லாத்தை பற்றிய தவறான எண்ணங்களாகவே இருந்தன. ஆகவே நீதிபதி அவர்கள், குழந்தைகள் ஆமினா அவர்களிடம் வளர்ந்தால் அவர்களுடைய வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும் என்றும், குழந்தைகள் ஆமினாவின் கணவரிடம் வளர்வதே அவர்கள் எதிர்காலத்துக்கு நல்லது என்றும் தீர்ப்பளித்தார். ஆமினா அவர்களால் தாங்க முடியாத துயரம்.

அப்பொழுது நீதிபதி ஆமினா அவர்களுக்கு 20 நிமிடங்கள் அவகாசம் கொடுத்தார். ஆம் அதேதான். ஒன்று அவர் கணவர் சொல்லுவது போல் இஸ்லாத்தை கைவிடுவது அல்லது குழந்தைகளை கணவரிடத்தில் ஒப்படைப்பது.

அவர் தன் குழந்தைகள் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஒரு தாய்க்கு இதை விட பெரிய இழப்பு என்ன இருக்க முடியும். ஒரு நாளல்ல, ஒரு மாதமல்ல, ஒரு வருடமல்ல…வாழ்க்கை முழுவதும் தன் குழந்தைகளை பிரிந்திருக்கவேண்டும். அதே சமயத்தில் இஸ்லாத்தை துறந்து ஒரு பொய்யான வாழ்க்கையையும் வாழ முடியாது. இஸ்லாம் என்ற உண்மையை தன் குழந்தைகளிடம் மறைக்கவும் முடியாது.

“நீங்கள் அறிந்துகொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்” — குரான் 2:42

“என் வாழ்வின் மிகத்துயரமான 20 நிமிடங்கள் அவை”
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், அவர் உடல் நிலையில் உள்ள சில பிரச்சனைகளால் மேற்கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.
“முன் எப்போதும் இல்லாத அளவிற்கு துவா செய்தேன்…………..எனக்கு நன்றாக தெரியும், என் குழந்தைகளுக்கு அல்லாவிடம் தவிர வேறு பாதுகாப்பான இடம் இல்லையென்று. நான் அல்லாவை துறந்தால், எதிர்காலத்தில் என் குழந்தைகளுக்கு இறைவனிடம் இருப்பதால் ஏற்படக்கூடிய அற்புதங்களை எடுத்து கூற முடியாமல் போய்விடும்”
ஒரு தாய்க்கு இதை விட ஒரு பெரிய தியாகம் இருக்க முடியாது. ஆம்….அல்லாவிற்காக குழந்தைகளை ( ஒரு ஆண், ஒரு பெண் ) துறந்து விட்டார்…

தன்னால் இஸ்லாத்தை விட முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார்.
“நான் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது என்னால் என் குழந்தைகள் இல்லாமல் வாழ்வது மிகக்கடினம் என்று அறிந்திருந்தேன். இதயம் கனத்தது, ஆனால் எனக்கு தெரியும், நான் சரியானதையே செய்தேன் என்று”
மீண்டும் இஸ்லாத்தை ஆராய தொடங்கினார். தனக்கு தெரிந்த இறைச்செய்தியை மற்றவர்க்கும் தெரியச்செய்தார். இஸ்லாமிய தாவாஹ் பணியை தொடங்கினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவருடைய அழகிய வார்த்தைகளும், இஸ்லாத்தினால் கற்றுக்கொண்ட  குணமும் மற்றவர்களை சுண்டி இழுத்தது. குரான் சொல்லுவது போல மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்து கூறினார். இறைவனின் கிருபையால், பலரும் ஆமினா அவர்களின் அழைப்பால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
இறைவன் ஆமினா அவர்களுக்கு கொடுத்த சோதனைகள் போதும் என்று நினைத்தானோ என்னவோ, அவர்கள் இழந்ததை விட அதிகஅதிகமாக கொடுக்க ஆரம்பித்தான்.
“அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவிற்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை” — குரான் 2:286
உண்மைதான்….இஸ்லாமினால் இப்போது அவர் மிகவும் மாறி இருந்தார், மிக பக்குவபட்டவராகவும் ஆனார். அவரை வெறுத்த அவரது குடும்பம் அவரது நல்ல பண்புகளை பாராட்டியது, அந்த பண்புகளை அவரிடத்தில் கொண்டு வந்த மார்க்கத்தையும் தான். ஆமினா அவர்கள் தன் குடும்பத்தை பிரிந்தபோதும், அவர்களிடத்தில் வெறுப்பை காட்டவில்லை, குரான் சொல்லியது போல் தன் குடும்பத்தை எப்போதும்போல் மிகவும் நேசித்தார்.

“மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள்; மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும்,   அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபச்சாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோரை, வீண் பெருமை பேசுபவர்களை நேசிப்பதில்லை” — குரான் 4:36

ஒரு பண்டிகை தினமென்றால், அவரது குடும்பத்திற்கு தவறாமல் வாழ்த்து அட்டை அனுப்புவார், மறக்காமல் குர்ஆனில் இருந்தோ ஹதீஸில் இருந்தோ சில வரிகளை அந்த வாழ்த்து அட்டைகளின் முடிவில் எழுதி விடுவார். ஆனால் அது எங்கிருந்து எடுக்க பட்டது என்று குறிப்பிடமாட்டார்.
அவரது குடும்பத்தில் இருந்து முதலில் முஸ்லிமானது அவரது பாட்டி. அவருக்கு 100 வயதிற்கு மேல் இருக்கும். ஆமினா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
அடுத்து முஸ்லிமானது, ஆமினா அவர்களை ஒரு காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்க்காக கொலை செய்ய துணிந்தாரே அவரேதான், ஆம் ஆமினா அவர்களின் தந்தையேதான் அவர்.
இது நடந்த சில நாட்களுக்கு பிறகு, அவரது தாய் ஆமினா அவர்களை அழைத்தார், தான் முஸ்லிமாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று வினவினார். அல்ஹம்துலில்லாஹ், ஆமினா அவர்கள் கண்ணீர் மல்க இறைவனுக்கு நன்றி கூறினார்.
” நீங்கள் ஒன்றும் செய்ய தேவை இல்லை, இறைவன் ஒருவனே என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்றும் சாட்சியம் கூறினால் போதும்”
அதற்கு அவரது தாய் ” அதுதான் எனக்கு முன்னமே தெரியுமே, வேறு என்ன செய்ய வேண்டும்”…
“அப்படியென்றால் நீங்கள் எப்பொழுதோ முஸ்லிமாகிவிட்டீர்கள்”
“ஒ அப்படியா, இறைவனுக்கு நன்றி, ஆனால் உன் தந்தையிடம் நான் முஸ்லிம் என்று சொல்லிவிடாதே. அவர் மிகவும் கோபப்படுவார், நானே பிறகு சொல்லிவிடுகிறேன்”
சுபானல்லாஹ், அவருடைய தந்தைதான் எப்பொழுதோ முஸ்லிமாகி விட்டாரே. ஆனால் அவரும் மறைத்திருக்கிறார், தன் மனைவி கோபப்படுவார் என்று. ஆக இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இத்தனை காலங்களாக முஸ்லிமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆமினாவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் தாரையாய் வெளியேறியது….

“இறைவா நீ மாபெரும் கிருபையாளன்”

பிறகு முஸ்லிமானது, ஆமினாவை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று சொன்ன அவரது சகோதரி. ஆம் அவர் இஸ்லாம் தான் மனநலத்திற்கு நல்லது என நினைத்திருக்க வேண்டும்.
16 வருடங்கள் கழித்து, ஆமினா அவர்களின் முன்னாள் கணவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். பதினாறு வருடங்களாக தான் ஆமினாவை கவனிப்பதாகவும், தன்னுடைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். பிரிந்து சென்ற அவரது மகன் தன்னுடைய 21 ஆவது வயதில் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்.
ஆக, எந்த மார்க்கத்திற்காக ஆமினாவை தனிமை படுத்தினார்களோ, இன்று அதே மார்க்கத்தில் அனைவரும் இணைந்து விட்டார்கள், மிக அதிக பண்புள்ளவர்களாக. எல்லா புகழும் அல்லாவிற்கே.
ஆனால் இறைவனுடைய மற்றுமொரு மாபெரும் பரிசு ஆமினா அவர்களை திக்குமுக்காட செய்தது. ஆமினா அவர்கள் தன்னுடைய விவாகரத்துக்கு பிறகு வேறொருவரை மணந்தார்கள். மருத்துவர்கள் ஆமினா அவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி இருந்தார்கள். இறைவன் கொடுக்க நினைத்தால் யார் தடுப்பது. ஆம், அந்த அதிசயம் நிகழத்தான் செய்தது. இறைவன் அவருக்கு ஆண் வாரிசை பரிசாக அளித்தான். இது இறைவனின் மாபெரும் கிருபை. அதனால் அந்த குழந்தைக்கு “பரக்காஹ்” என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள்.
அல்லாவிற்காக ஆமினா அவர்கள் செய்த தியாகங்கள் நெஞ்சங்களை உருக்குபவை.
  • ஒரு காலத்தில் அவரை விட்டு விலகிய குடும்பத்தாரில் இன்று பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
  • அன்றோ  இஸ்லாத்தை தழுவியதற்காக அவரை விட்டு விலகினர் அவரது நண்பர்கள். இன்றோ அவரை நேசிக்க கூடியவர்கள் கோடானுகோடி பேர்.

“நண்பர்கள் நான் போகுமிடமெல்லாம் கிடைத்தார்கள்”

  • அன்றோ ஹிஜாப் அணிந்ததற்காக வேலையை இழந்தார்கள். இன்றோ சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர்.
இறைவன் தன்னை நாடிவந்தவர்க்கு தன் அருட்கொடைகளை அளித்து விட்டான். இன்று அவர் பல இடங்களுக்கும் சென்று இஸ்லாத்தை போதித்து வருகிறார். பலரையும் இஸ்லாத்தின்பால் அழைத்து வருகிறார். இவரால் இஸ்லாத்தை தழுவியவர்கள் ஏராளமானோர்.
கடும் முயற்சி எடுத்து அமெரிக்காவில் பெருநாள் தபால்தலைகளை வெளியிட செய்தது இவரது அமைப்பு. இப்பொழுது பெருநாள் தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்க முயற்சி எடுத்து வருகிறது இந்த அமைப்பு.
சில வருடங்களுக்கு முன் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறிந்தார்கள். அது முற்றிவிட்டது என்றும் இன்னும் ஒரு வருட காலத்தில் இறந்து விடுவார்கள் என்றும்  மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். ஆனால் ஆமினா அவர்களின் ஈமான் இறந்துவிடவில்லை. அது இன்னும் அதிகரித்தது.

“நாம் எல்லோரும் இறக்கத்தான் போகிறோம். எனக்கு நன்றாக தெரியும் நான் அனுபவிக்ககூடிய இந்த வலியில் என் இறைவனின் அருள் உள்ளது என்று”

எல்லா புகழும் அல்லாவிற்கே, இன்றும் ஆமினா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள். இன்னும் தனக்கு வந்துள்ள இந்த புற்றுநோய்தான் தனக்கு இறைவன் கொடுத்துள்ள மாபெரும் கிருபை என்றும் நம்புகிறார்கள்.
இன்று ஆமினா அவர்களிடம் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை. தன் 33 வருட தாவாஹ் பணியில் அனைத்தையும் இஸ்லாத்திற்காக கொடுத்து விட்டார்கள். இப்பொழுது அமெரிக்க முஸ்லிம்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.
ஆனால் ஏழை என்று நினைத்து விடாதீர்கள், அவர் மாபெரும் பணக்காரர், ஆம் இறைவனின் பார்வையில்…அவர் செய்துள்ள நன்மைகளின் அளவினால்.

“ஆனால் பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டு”  — குரான் 11:11

” நிச்சயமாக இந்த குரான் முற்றிலும் நேர்வழியை காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் மூமின்களுக்கு நிச்சயமாக மிகப்பெரும் நற்கூலி உண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது” — குரான் 17:9

குறிப்பு:
ஆமினா அவர்களின் சொற்ப்பொழிவுகள் பல இணையதளங்களில் கிடைக்கின்றன, யுடுயுப் (youtube) உட்பட. குறிப்பாக பெண்களுக்கான அவரது சொற்ப்பொழிவுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

References:

1. Interview with Rebecca Simmons of The Knoxville News-Sentinel in Tennessee

 

Newsletter Sign Up

For Latest Updates